சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இந்திய - ஈரான் கூட்டு திட்டமான சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா நிதியை குறைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அப்பாஸ் அராக்சி கூறியதாவது,

இது ஈரான் மற்றும் இந்தியா இரண்டுக்கும் ஏமாற்றம் என்று நான் நினைக்கிறேன். இந்திய பெருங்கடலை, மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் தங்க நுழைவு வாயில் என்று இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி ஒருமுறை கூறி இருந்தார். இந்த திட்டம் முழுமையாக வளர்ச்சி அடைந்தால் அது இந்தியாவை ஈரான் வழியாக, மத்திய ஆசியாவுடனும், காகசஸ் உடனும், ஐரோப்பா உடனும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதுதான் சிறந்த போக்குவரத்துப் பாதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் ஒருநாள் இந்த துறைமுகம் முழு வளர்ச்சியைக் காணும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.