சென்னை: ''இனாம் நிலத்துக்கும், கோவில் நிலத்துக்கும், வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர். இனாம் ஒழிப்பு சட்டம் வழியே, அந்த இடங்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை ஒரு அங்குலம் கூட, யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கவில்லை,'' என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் ஆகியோர் அளித்த பேட்டி: 'பழனி கோவில் நிலத்தை, அமைச்சரின் உறவினர் வாங்கியுள்ளார். அமைச்சருக்கு தெரிந்துதான் இது நடந்தது' என, வன்மத்தை சிலர் பரப்புகின்றனர். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட துணை சார் - பதிவாளர் மீதும், அதை வாங்கிய நபர்கள் மீதும், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, விசாரணை நடந்து வருகிறது. ஒரு வேளை என்னுடைய உறவினர், இந்த முறைகேடில் ஈடுபட்டிருந்தால், ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். எனக்கே புதிய உறவினர்களை உருவாக்குகின்றனர். கோவில் நிலங்களை பொறுத்தவரை, ஒரு அங்குலம் நிலத்தை கூட, யாருக்கும் கொடுக்க மாட்டோம். கோவில் நிலங்களை முறைகேடு செய்வோர் மீது, நேர்மையாக, சட்டப்படி, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். கரூரில், கோவில் நிலத்தை பட்டா போட்டு கொடுத்து விட்டனர் என்பது உண்மைக்கு புறம்பானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கு, உழவு செய்து வரும் விவசாயிகளுக்கு, அந்த இடத்தின் உரிமையை வழங்கும் வகையில், 1963 - 1967ம் ஆண்டில், இனாம் ஒழிப்பு சட்டம் வாயிலாக, பட்டா வழங்கப்பட்டது. அந்த வகையில், கோ வில் நிலங்களில் பட்டா வழங்கி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அரசியல் சூழல் காரணமாக, 1912ல் இருந்த ஆவணங்களை வைத்துக் கொண்டு, அந்த நிலங்களுக்கான பத்திரப்பதிவை தடை செய்கின்றனர். இதனால், அந்த நிலங்களை வைத்திருப்போர், வங்கிகளில் நிலத்தை வைத்து கடன் வாங்க முடியாது. அவசர தேவைக்கு விற்க முடியாது. எனவே, தடையை நீக்கக் கோரி, அங்கு வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர். கரூரில், 3,071 சர்வே எண்களின் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டு உள்ளது. அதில், 2,024 சர்வே எண்கள், கோவில் நிலங்களுக்குரியவை. அவற்றை பத்திரப்பதிவு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,167 சர்வே எண்களுக்குரிய நிலங்களில் வசிப்போருக்கு, இனாம் ஒழிப்பு சட்டத்தின் வழியே, பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகை பதிவேடுகளையும் சரி பார்த்து, வழக்குகள் இல்லாத, தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்கள் மீதான பத்திரப்பதிவு தடையை மட்டுமே நீக்கியுள்ளோம். கோவில் நிலத்தை யாருக்கும், பட்டா போட்டு கொடுக்கவில்லை. இதை மூடி மறைத்துவிட்டு, கோவில் நிலத்தை பட்டா போட்டு கொடுக்கிறோம் என, பொய் பிரசாரம் செய்கின்றனர். அவ்வாறு செய்வோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.