பர்மிங்காம்: முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் சுப்மன் 80 ரன் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பேட்டிங்' தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு பெக் டக்கெட், ஜேக்கப் பெத்தல் நல்ல துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தனர். பின் இந்திய பவுலர்கள் மிரட்டினர். போட்டியின் 13வது ஓவரை வீசிய குர்னுார் இரட்டை 'அடி' கொடுத்தார். 2வது பந்தில் பெத்தல் (14) அவுட்டானார். 4வது பந்தை டக்கெட் (43) துாக்கி அடித்தார். எல்லையில் பிடிக்க தடுமாறிய பும்ரா, பந்தை மேலே எறிந்து மீண்டும் கச்சிதமாக பிடித்தார். இதில் சந்தேகம் எழ, 'டிவி' அம்பயர் ஆய்வு செய்தார். 'ரீப்ளே' பார்த்ததில், பும்ராவின் 'ஷூ', விளம்பர பலகை மீது படவில்லை என்பது உறுதியாக 'அவுட்' கொடுக்கப்பட்டது. பும்ராவின் அடுத்த ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹாரி புரூக் (1) நடையை கட்டினார். பிரசித் கிருஷ்ணா ஓவரில் (17வது) பட்லர் (5), சாம் கர்ரான் (0) வெளியேற, 80/5 ரன் என நிலைமை மோசமானது. வில் ஜாக்ஸ், 20 ரன் எடுத்தார். 21.4 ஓவரில் 107/6 ரன் எடுத்து தத்தளித்தது. இந்த சமயத்தில் அனுபவ ஜோ ரூட், லியாம் டாசன் போராடினர். 7வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்து, அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் எட்டினர். டாசன் (68) உள்ளிட்ட 'டெயிலெண்டர்கள்' அக்சர் படேல் 'சுழலில்' சிக்கினர். இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் 258 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரூட் (76) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அனுபவ ரோகித் சர்மா (11), கோலி (5) ஏமாற்றினர். பின் கேப்டன் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் அசத்தினர். அரைசதம் கடந்த சுப்மனுக்கு வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. 80 ரன் எடுத்த நிலையில், 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். ஷ்ரேயஸ் (35) ரன் அவுட்டானார். ராகுலும் (1) விரைவில் 'பெவிலியன்' திரும்ப, இந்தியா 28 ஓவரில் 160/4 ரன் எடுத்து தவித்தது. கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் துணிச்சலாக விளையாடினர். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். வில் ஜாக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அக்சர் (57*), அரைசதம் கடந்தார். அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய வாஷிங்டன் (52*) அரைசதம் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 45.2 ஓவரில் 262/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 'டி-20' தொடரை முழுமையாக இழந்த நிலையில், இங்கிலாந்து மண்ணில் இம்முறை இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.