சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், இன்றும், நாளையும், வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், அதிக வெப்பத்திற்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக நேற்று மதுரையில், 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், நேற்று இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பம் உயர்ந்ததால், வறண்ட வானிலை நிலவியது. நேற்று, நாட்டிலேயே அதிகபட்சமாக, மதுரையில், 42.5 டிகிரி செல்சி யஸ், அதாவது, 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது; இது, கடந்த 26 ஆண்டுகளில் மதுரையில் பதிவாகாத வெப்பம் என கூறப்படுகிறது. திருத்தணி, வேலுார், பாளையங்கோட்டை, திருச்சி, துாத்துக்குடி, ஈரோடு, கடலுார், கரூர் பரமத்தி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. மேற்கு திசை காற்றின், வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இயல்பை விட, 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து, வெப்ப அலை வீசும். காற்றில் ஈரப்பதமும் கலந்திருக்கும். எனவே, புழுக்கம் அதிகரித்து, அசவுகரியமான சூழல் நிலவலாம். இதனால், உள் தமிழகத்திற்கு, இன்று, 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை பாதிப்பை தவிர்க்க, பொதுமக்கள், மதியம் 12:00 மணி முதல், பிற்பகல் 3:00 மணி வரை, தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கா விட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், எலுமிச்சை சாறு, லஸ்ஸி மற்றும் ஓ.ஆர்.எஸ்., கரைசல் உள்ளிட்ட பானங்களை குடித்து, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். வெயிலின் நேரடி தாக்கத்திலிருந்து விடுபட, குடை, தொப்பி அணிந்து, தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.