தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் ஆண்டு என்பதால் ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று கவர்னர் கனவு காண்கிறார். சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் உரையை புறக்கணித்தது திட்டமிட்ட செயல்.தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது. கவர்னர் மாளிகை அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தமிழக அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறி வருகிறார். கவர்னரின் உரை நேரலை வராததற்கு தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையாக இருக்கலாம். கவர்னரின் மைக் ஆப் செய்யப்படவில்லை.அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார். தமிழக அரசின் முதலீடு ஈர்ப்பு குறித்து கவர்னர் கூறுவது தவறானது.

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதே மரபு. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கவர்னர் கூறி வருகிறார். மத்திய அரசே தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக கூறுவதை கவர்னர் எப்படி மறுக்க முடியும். இரட்டை இலக்கத்தில் தமிழகத்தின் வளர்ச்சி உள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை என்றால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எப்படி அடைய முடியும்.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பிறமாநிலங்களோடு ஒப்பிடவே முடியாது. வருகிற செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை கண்டு தி.மு.க. அஞ்சவில்லை. தமிழகத்திற்கு போதைப்பொருள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.