ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் ஆண்டின் முதல் கூட்டம் நேற்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவர்னர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால் நிகழ்ச்சி தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கூறி கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, உரையை வாசிக்காமல் கவர்னர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என கவர்னர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அளித்தார். அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து கவர்னர் வெளியேறினார். கவர்னர் வெளியேறியதை தொடர்ந்து பேரவையில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. கவர்னர் வேண்டுமென்றே அரசமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். அவரது செயல் என்பது நூற்றாண்டு மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவமதிக்கும் செயலாகும். கவர்னர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணா கூறியிருந்தார். கவர்னர் ஏற்கனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. பொது மேடையில் அவதூறு பேசி வருகிறார் கவர்னர். சட்டப்பேரவை மாண்பை பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது. உரையை கவர்னர் படிக்காமல் வெளியேறியதை இப்பேரவை ஏற்கவில்லை. உரையை கவர்னர் படித்ததாக இப்பேரவை கருதுகிறது.

உரையை கவர்னர் படித்ததாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்படுகிறது. கவர்னர் உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும். வெளிநடப்பு இடம்பெறாது. கவர்னர் உரையை படிக்காதது ஒரு நாள் செய்தியாக இதை கடந்து விட முடியாது. ஆண்டு தொடக்கத்தில் கவர்னர் உரை என்ற நடைமுறையில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கவர்னர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.