காரைக்குடி:
கனிமவளங்களை அரசே நேரடியாக விற்பனை செய்வது தொடர்பான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான வங்கிக் கடனுதவிகளை கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்களை அரசே நேரடியாக விற்பனை செய்வது குறித்த திட்டம் அரசின் ஆய்வில் உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 10,000 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் கனிமவளங்களைக் கொண்டு சென்றால், அவற்றின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் கனிமவளக் கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஜிபிஎஸ் பொருத்தாத வாகனங்களில் கனிமவளங்களைக் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு முறைகள் தீவிரப்படுத்தப்படும்.
சிவகங்கையில் கிடைக்கும் கிராபைட் உள்ளிட்ட கனிம வளங்கள் குறித்தும், சிக்ரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் புதிய கிராபைட் ஆலைகளைத் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதாகக் கூறப்படுவது தவறான தகவல். சட்டவிரோதமாக வெட்டப்படும் கனிமவளங்களைக் கட்டுப்படுத்தவும், கனிமவள விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் தூர்வாரி மண்ணைப் பயன்படுத்தும் திட்டம் நீர்வள ஆதாரத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.