சென்னை: தனது மகன் ராகாவின் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகன் ராகாவுடன் இருக்கும் படத்தையும், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘எனது மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது கிரிசில்டாவின் மகனை தனது மகன் என மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.