தமிழகத்தில் 95% ஊழலை ஒழித்துவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இது குறித்து நிர்மல் குமார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முந்தைய ஆட்சி காலத்தில் அரசுத் திட்டங்களுக்கான அனைத்து ஒப்புதல்களும் 'கட்சி நிதி' என்ற பெயரில் லஞ்சம் கொடுத்த பின்னரே வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர்களும் இந்த ஊழலின் பின்னணியில் ஒரு பகுதியாக இருந்தனர், இதன் விளைவாக அரசு செலவழித்த பணத்தில் 40% இழப்பு ஏற்பட்டது. தவெக அரசை அமைத்த பிறகும், ஊழல் இருந்ததால் கோப்புகள் நகரவில்லை. கோப்புகளுக்கு ஒப்புதல் பெறவே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்று, நாம் 95% ஊழலை ஒழித்துள்ளோம்.
எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. எரிசக்தித் துறையில் ரூ.2,500 கோடி மதிப்பிலான 45 டெண்டர்கள் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குறுதிகளை முதல்வர் விஜய் நிறைவேற்றுவார். முன்னதாக ரூபாய் 1 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்ட ஒரு பணி, இன்று 28 ஆயிரம் ரூபாய்க்கு செயல்படுத்தப்படுகிறது.
நீட் தேர்வு குறித்த எங்கள் நிலைப்பாடு ஒருபோதும் மாறியதில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொடர்ந்து கோரி வருகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் நாங்கள் ஆராய்வோம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.