மதுரை: அலங்காநல்லூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த பெற்றோரின் 16 வயது மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்தார். இவரை ஆங்கில ஆசிரியர் சில தினங்களுக்கு முன்பு திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிலேயே நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனிடையே, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி இறப்பதற்கு முன் தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இறந்த மாணவி பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற நிலையில் தற்போது படிப்பில் பின் தங்கியதாலும், மேலும் மாணவர் ஒருவரை காதலித்து அவரது பெயரை நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவியை ஆசிரியர், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாரின் விசாரணை நடத்தி வருகின்றனர்.