வாஷிங்டன்: அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11வது நாளாக ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. அங்குள்ள ஏவுகணை ஏவுதளங்கள், டிரோன் தளங்கள், ராணுவ கட்டளை மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடல்சார் ராணுவ வசதிகள் உள்ளிட்ட இலக்குகள் துல்லியமாக குறிவைத்து தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டளை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சமும் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் எதிரொலியாக எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 91 டாலருக்கும், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு சராசரியாக 4 டாலராகவும் உயர்ந்தது.