புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய பிரதமர் மோடி, “ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் என்னைப் பற்றியும், எனது மறைந்த தாயார் பற்றியும் மிகவும் மோசமான சொற்களைப் பயன்படுத்திப் பேசியது மனதுக்கு மிகுந்த வேதனையளித்தது.
இருப்பினும், தவறு செய்வது இளமைப் பருவத்தின் இயல்பு. அந்தத் தவறுகளிலிருந்து திருந்த அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வழக்குகளைப் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அலைக்கழிப்பதாலோ அல்லது சமூக அளவில் அவர்களைத் தனிமைப்படுத்துவதாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் வழிதவறிய குழந்தைகள், அவர்களைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதே நமது கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நாக்கு தவறி பல்லில் கடிபட்டு ரத்தம் வந்தாலும், நாம் பல்லை உடைப்பதில்லை. ஏனெனில், பல்லும் நாக்கும் நம்முடையதே" என்ற உவமையைக் கூறி, மாணவர்களை மன்னிக்கும் தனது முடிவை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, பிரதமரை அவதூறாகப் பேசியது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக டெல்லி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.