பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள 'பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக' மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 16 பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தீ விபத்து ஏற்பட்டபோது அந்த நர்சரி வார்டில் 15 குழந்தைகள் இருந்ததாகவும், ஒரே ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகமான 'ஜியோ நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. நர்சரிக்குள் இருந்த ஏ.சி கம்ப்ரஸர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் காலை 6 :45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், தீயை அணைக்கும் பணியிலும், அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இச்சம்பவம், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். “குழந்தைகளுக்கு ஏற்பட்ட இத்தகைய நிலைமையை சரிசெய்யவே முடியாது” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தீவிபத்து குறித்து உண்மை கண்டறியும் குழு மூலம் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.