நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுதாரரான ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனுதாரரான ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் ஆஜராகி, நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும், கூடுதல் கோரிக்கையாக சி.பி.ஐ. விசாரணை கோரவும் மனுதாரர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.