ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு சாதனை படைத்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆங்கில வார இதழ் ஒன்று நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

எல்லோருக்குமான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு செய்து காட்டி இருக்கிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளோம்; தமிழ்நாட்டில் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு சாதனை படைத்து வருகிறது. புதிய தொழில் முதலீடுகள் மூலமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாக 3 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். பெரு நகரங்களுக்கு நடுவே அழகிய பூங்காக்களை அமைத்துள்ளோம். 2-ம் நிலை நகரங்களில் நியோ டைடல் பார்க் அமைத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமனம் செய்துள்ளோம். முத்திரை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் மாநிலமாக வேறு எந்த மாநிலமும் இருக்காது.

இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசே தமிழ்நாட்டை பாராட்டுகிறது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு; டபுள் எஞ்சின் என்று சொல்கிற டப்பா எஞ்சின் மாநிலங்களில் கூட இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதனை செய்து காட்டியுள்ளோம். யார், யாருக்கு தலைமை என்றே தே.ஜ.கூட்டணியில் இன்றும் தெரியவில்லை. தே.ஜ.கூட்டணி ஆட்சி என மோடி கூறுகிறார். அ.தி.மு.க ஆட்சி என எடப்பாடி கூறுகிறார். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.