அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அசாமில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிவசாகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் என நேற்று மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மாநிலத்தில் வெள்ளம் தொடர்பான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசு அறிக்கையின்படி, சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் மொத்தம் 3,00,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 16,500-க்கும் மேற்பட்ட மக்கள் 71 நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும், 72,000-க்கும் மேற்பட்டோருக்கு 30 நிவாரண விநியோக மையங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாமில் வெள்ள நீர் தற்போது வடிந்து வரும் நிலையிலும், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து முழுவதும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை ஆங்காங்கே இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.