சென்னை: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், மதுரை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று( ஜூலை 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மாவட்டங்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் சமவெளி பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சமவெளி பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.