விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை பதிவு செய்த வழக்கு சட்டத்துக்கு முரணானது எனக் கூறி, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மார்க்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஜாமீன் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபா தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணனும், மார்க்கண்டேயன் தரப்பில் வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டரும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பினரும் சுமார் அரை மணி நேரம் தங்களது வாதங்களை முன்வைத்தனர். வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான உத்தரவை மாவட்ட நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டார்.