புதுடில்லி: டாஸ்மாக் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், அவர் தன் பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்ட விரோதமாக பார் நடத்தியது, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளதாகவும், எனவே, காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதால், முன்ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனுவை செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், முன் ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டனர். மேலும், அவரது பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.