லக்னோ: உத்தர பிரதேசத்தின் மகா​ராஜ் கஞ்ச் மாவட்​டம், சோனாலி காவல் நிலைய எல்லைக்​குட்பட்ட நேபாள எல்லையில் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த சனிக்​கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்​டிருந்தனர். அப்போது நேபாள எல்​லைக்​குள் நுழைய முயன்ற ஒரு​வரை மடக்கிப் பிடித்​தனர். உ.பி. காவல் துறை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்ட அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தினர்.


இது குறித்து மகா​ராஜ்கஞ்ச் மாவட்ட கூடு​தல் காவல் கண்காணிப்பாளர் சித்​தார்த் கூறிய​தாவது: கைது செய்யப்பட்டவர் அமெரிக்​காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜோர்டான் பிரவுன் என தெரியவந்துள்ளது. அமெரிக்க கடற்​படை முன்​னாள் அதி​காரி என்றும் கூறுகிறார். அவரிடம் முறை​யான அடை​யாள மற்​றும் பயண ஆவணங்​கள் எதுவும் இல்லை. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்​ற​ அவர், அங்கு தனது பாஸ்​போர்ட்டை இழந்ததாகவும் கூறினார். பிறகு கடல் வழியாக இலங்கை சென்றடைந்​து, அங்கிருந்து கடந்த 2025 நவம்பர் 2ம் தேதி கடல் மார்க்கமாக கோவா வந்து அங்கு தங்கியுள்ளார். இதன் மூலம் பாஸ்போர்ட் இல்லாமல் சுமார் 7 மாதங்​கள் அவர் இந்தியாவில் கழித்துள்​ளார். கோவாவில் இருந்து பெங்களூருவுக்கும் பிறகு அங்கிருந்து நேபாளத்திற்குள் நுழையும் நோக்கத்​தில் சோனாலி எல்லைக்கும் வந்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.