காமராஜரின் 124வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.


அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், காமராஜர் ஆட்சியை அடிகோடிட்டு காட்டாமல் இருக்க முடியாது. காமராஜரின் பிறந்தநாள் இன்று 'கல்வி வளர்ச்சி நாளாக' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 15) காமராஜரின் 124வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். காமராஜர் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.


அந்த வகையில் , 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜரின் புகழ், என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.