ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாட மாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதனை நிராகரித்தது. அதை தொடர்ந்து இந்தியாவில் ஆடுவது குறித்து 21-ம் தேதிக்குள் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று அணி அறிவிக்கப்படும் என ஐ.சி.சி வங்கதேசத்தை எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று தொடர்ந்து முரண்டு பிடித்தால் அந்த அணிக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.