அனுமதிச் சீட்டு இல்லாமல் வந்த ரஜினிகாந்த் வசனம் பேசியதாகவும், யேசுதாஸ் பாடிக் காட்டியதாகவும் மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்தபோஸ் தெரிவித்தார்.

பிரபல நாளிதழின் சார்பில் சென்னையில் இரண்டு நாட்கள் (மார்ச் 2, 3) நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்தபோஸ் கலந்துகொண்டார். இதில், கேரள மாநிலத்தில் அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த போது நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்து பேசியதாவது:

கேரள கலாசாரத் துறை செயலாளராக நான் பணிபுரிந்தபோது, மிகப் பெரிய அளவிலான கலாசார நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். இந்த நிகழ்வுக்கு அனுமதிச் சீட்டு வழங்கி, அவர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்தோம். இதற்காக காவல்துறை ஆணையர் அனுமதிச் சீட்டை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் இருந்து திரைத் துறையினரை அழைத்திருந்தோம்.

நிகழ்வு அரங்கிற்கு முதலில் நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அவர் அனுமதிச் சீட்டை எடுத்துவர மறந்ததால் அவரை காவலர்கள் அனுமதிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் அவர் ரஜினி என்று கூறிய போதும், அனுமதிச் சீட்டு கொடுங்கள் இல்லையென்றால் நீங்கள்தான் ரஜினி என நிரூபியுங்கள் என்று தெரிவித்து விட்டார். உடனே, ரஜினி பிரபல வசனத்தை கூறிய பிறகு அவரை அனுமதித்தார். பின்னர், கே.ஜே. யேசுதாஸ் வருகைதந்தார். அவரும் அனுமதிச் சீட்டை எடுத்துவரவில்லை. காவலரிடம் பிரபல பாடல் ஒன்றை பாடிக் காட்டிய பின்னர், அவர் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரியாது.

இந்த நிலையில், நான் வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வர முயன்றேன். என்னிடமும் அனுமதிச் சீட்டை அந்த காவலர் கேட்டார். நான்தான் கலாசாரத்துறை செயலாளர் என்று கோபத்துடன் கூறினேன். உடனே, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அனுமதிச் சீட்டு இல்லாத ரஜினி, யேசுதாஸ்கூட அவர்கள் யார் என நிரூபித்த பிறகே உள்ளே அனுப்பினேன் என்றார். நான் அவரிடம் ரஜினி, யேசுதாஸ் எல்லாம் யார் என்று கேட்டேன். அந்த காவலர் உங்களுக்கு அவர்கள் யார் என்று தெரியாதா என்று கேட்டார். அவர்களை பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டவுடன், நீங்கள்தான் கலாசாரத்துறை செயலாளர் என்று நிரூபித்து விட்டீர்கள், உள்ளே செல்லுங்கள் என அனுமதித்தார் எனத் தெரிவித்தார்.