நாகர்கோவில், செப்.13-
கன்னியாகுமரியில், ரசாயன கலவை பூசுவது தாமதமாவதால், உப்புக்காற்றால் திருவள்ளுவர் சிலை சேதமடைந்து வருகிறது.
கன்னியாகுமரி கடல் நடுவில் நிறுவப்பட்டுள்ள, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை, உப்புக்காற்றில் இருந்து பாதுகாக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசுவது வழக்கம். அதன்படி, 2022 வரை, ஐந்து முறை ரசாயன கலவை பூசப்பட்டது.
சிலையைச் சுற்றி இரும்பு கம்பிகளால் சாரம் அமைத்து, சிலை இணைப்பு பகுதிகளில் ‘ராக்கவுட்’ செய்து, கருப்பட்டி, கடுக்காய், சுண்ணாம்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பிரத்யேக கலவை, இணைப்புகளில் பூசப்படும்.
அதன்பின், சிலையின் பீடம் முதல், தலை உச்சி வரை படிந்துள்ள உப்புநீர், காகிதக்கூழால் உறிஞ்சப்படும். ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பாலி சிலிக்கான்’ கலவை ‘ஸ்பிரே’ செய்யப்படும். இந்த பணிகள், ஆறு மாதங்கள் நடைபெறும்.
கடந்த, 2022 ஜூன் மாதம், 1 கோடி ரூபாய் செலவில் இந்த பணி நடைபெற்றது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், இந்த பணி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று மாதங்கள் கடந்தும், இதுவரை ஆயத்த பணிகள் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில், கடல் சீற்றத்தால், சிலை பகுதிகளில் அதிக அளவிலான உப்புக்கசிவும், பல இடங்களில் சிறிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, ரசாயன கலவை பூசி, திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.