அமேதி: முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் நிறுவனம் (ஐஆர்ஆர்பிஎல்) 2019-ல் நிறுவப்பட்டது. இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் துப்பாக்கிக்கு ‘ஷெர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐஆர்ஆர்பிஎல் தலைமைச் செயல் அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சர்மா சமீபத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் இது பெருமைமிக்க தருணம். 100% இந்திய உதிரி பாகங்கள் மற்றும் உள்ளீட்டுப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட முதல் ஏகே-203 (ஷெர்) துப்பாக்கியை வெற்றிகரமாகத் தயாரித்து சுட்டுப் பார்த்துள்ளோம். அடுத்தகட்டமாக, செப்டம்பர் 2026-ல் ராணுவத்தின் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்க, தேவையான எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.