தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாகக் குறைந்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைக்கு நீர்வரத்து உள்ளது. கபினி அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு நீர்வரத்தை பொறுத்து, தமிழக காவிரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
அதன்படி ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 12,000 கன அடியாக இருந்த நிலையில் 10,000 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 11 வது நாளாக நீடிக்கிறது இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.