மராட்டியத்தில் வரும் 15-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மும்பை மாநகரம் மராட்டியத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது ஒரு சர்வதேச நகரம். இதனை மீண்டும் பாம்பே என்று மாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதற்கு மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், தமிழகத்தில் இருந்து வந்த உங்களுக்கும் இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? தமிழகத்தில் இருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறார். அதனால்தான் உங்களை எல்லாம் பால் தாக்கரே மகராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக இதுவரை அவதூறாகப் பேசி விட்டு, இப்போது இப்படி பேசுகிறீர்களா? என்று ஆவேசமாகக் கூறினார்.

தமிழர்கள் மற்றும் அண்ணாமலை குறித்து ராஜ் தாக்கரே மிகவும் மோசமான விமர்சனங்களை தற்போது முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், உத்தவ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத்தும் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க பா.ஜ.க. சதி செய்வதை அண்ணாமலையின் கருத்து பிரதிபலிக்கிறது. அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.