சென்னை, செப். 16-
த.வெ.க ஆட்சியில் ஜூலையில் திறந்த சிலைக்கு ஆகஸ்டில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோவில், ‘தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
ஜூலை மாதம் அமைச்சர் சரத்குமார் பெருங்களத்தூர் ரவுண்டானாவில் அசோகா பில்லர் சிலையை திறந்து வைத்தார். ஜூலை 29-ஆம் தேதி இது தொடர்பாக அமைச்சர் சரத்குமார் அவரது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். ஆனால், இந்த அசோகா பில்லருக்கான டெண்டரே ஆகஸ்ட் 6-ஆம் தேதி தான் போடப்பட்டு உள்ளது. எல்லா வேலையும் முடிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தான் இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தான் டெண்டர் முடிக்கப்படுவது போல காட்டப்பட்டு உள்ளது. இந்த டெண்டருக்கான வேலைகளை 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று டெண்டர் இன்வைட்டிங் அத்தாரிட்டி தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் குறிப்பிட்டு உள்ளார்.
இதுமட்டும் அல்ல சிட்லபாக்கம் ரவுண்டா பக்கத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஒரு சிலை திறந்து வைத்திருக்கிறார்கள். இந்த சிலைக்கு டெண்டர் கோருவது ஆகஸ்ட் 6-ஆம் தேதி, ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரைக்கும் ஒப்பந்ததாரர்கள் போட்டிபோடலாம். ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு பின் ஒருவருக்கு டெண்டர் கொடுக்கப்படும். இதில், பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் முன்னாடியே கூட்டு சதி செய்து ஒப்பந்ததாரரை முடிவு செய்துவிட்டார்.
கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய்க்கான டெண்டர்களை முதலிலேயே முடிவு செய்து ஒப்பந்ததார்களுடன் சேர்ந்து கூட்டு சதி செய்துள்ளார். இப்போது கணக்கு காட்டுவதற்காக டெண்டர்கள் போடப்பட்டு உள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய த.வெ.க அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை பாயுமா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.