மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜ., முன்னாள் எம்பி பிரிஜ் பூஷணுக்கு விடுதலை வழங்கி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2023ல் அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், நம் நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பா.ஜ., எம்.பி.,யாகவும் இருந்த அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி டில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனையர் அளித்த புகாரின்படி, டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் உதவிச் செயலர் வினோத் தோமர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.

வழக்கு, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி அஸ்வினி பன்வார் முன்னிலையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனையர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜானும், பிரிஜ் பூஷன் தரப்பில் வழக்கறிஞர் ராஜீவ் மோகனும் தங்களின் இறுதி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவடைந்தது. இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 03) தீர்ப்பு அளிக்கப்பட்டது. மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜ., முன்னாள் எம்பி பிரிஜ் பூஷணுக்கு விடுதலை வழங்கி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.