சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி (வயது 79) நேற்றிரவு (12.07.2026) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் பூமணியின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருடைய இல்லத்தில் இன்று (13.07.2026) மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், கரிசல் வட்டார வாசகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு எழுத்தாளர்களும், திரையுலகினரும், வாசகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த எழுத்தாளர் பூமணிக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.