விருதுநகர் மாவட்டத்தில் பிரியாணி கடை கிளைகள் (Franchise) அமைத்துத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் சுமார் 240 பேரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது,. ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன், சண்முகசுந்தரம், பிரகாஷ், மரிய தேவதாஸ் உள்ளிட்ட நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


முதலீட்டாளர்களிடம் ஒப்பந்தம் போடும்போது, "நீங்க எதுவும் செய்ய வேண்டாம், நாங்களே பிரியாணி சமைத்துத் தந்துவிடுவோம்; லாபத்தில் 10% பங்கு தருவோம்.கடையின் வாடகை உள்ளிட்ட இதர செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்வோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்,.

ஒரு பிரான்சைஸ் கிளைக்கு சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 18,000 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் உள்ளனர்.



வேலூரில் மட்டும் ஒரு கிளையைத் தொடங்கிவிட்டு, அதை மற்றவர்களுக்குக் காட்டி நம்பிக்கையை வரவழைத்து பலரிடம் பணத்தைச் சேர்த்துள்ளனர். அதன் பிறகு எந்தக் கிளையையும் திறக்காமல் அந்த ஒரு கிளையையும் மூடிவிட்டனர்,.


இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,.

நாளை (24.07.2026) அக்யூஸ்ட் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும், இல்லையெனில் வாரண்ட் பிறப்பிக்கப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்,.

மேலும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட குறைந்தபட்ச தொகையான 12 லட்சத்தைக் கூட கட்டவில்லை என்றால், பிணையை (Bail) ரத்து செய்ய நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.



சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்துள்ளதால், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாகவும், உரிய நடவடிக்கை எடுத்துத் தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும் முதலீட்டாளர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்,.


இந்த மோசடி தொடர்பாக விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவில் 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.