புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேரணியின் போது, பெண் பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவிகள் மீது ஆண் காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், சிலர் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் பின்புறத்தில் ஆண் காவலர் ஒருவர் லத்தியால் அடிக்கும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.