மதுரை: தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை விளாங்குடி 1-வது வார்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட அரிசி குறித்து எழுந்த புகாரை அதிகாரிகள் விசாரித்து, அது ரேஷன் அரிசி இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.


சமூக நல ஆர்வலர் பி. சிவாஜி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில், கடந்த ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற விழாவில் 1000 பேருக்கு தலா 5 கிலோ வீதம் மொத்தம் 5 டன் ரேஷன் அரிசி வழங்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். ஏழை எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்ட அரிசியைப் பயன்படுத்தி, முதல்வரின் நற்பெயரைக் கெடுக்கச் சதி நடப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்தக் குற்றச்சாட்டை அந்த விழாவில் அரிசி பெற்ற பொதுமக்கள் மறுத்துள்ளனர். விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பயனாளி கூறுகையில், "எங்களுக்கு வழங்கப்பட்டது தரமான நாட்டுப் பொன்னி அரிசி. அதைத்தான் நாங்கள் வீட்டில் சமைத்துப் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டமான அரிசி வழங்கப்பட்டதாகத் தவறாகப் பேசுகிறார்கள், அதில் உண்மையில்லை" என்று வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, மதுரை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராஜகுரு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் சுகி பிரேமலதா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஹேமா சலோனி ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.


,இந்தக் குழுவின் ஆய்வில் வழங்கப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டஅரிசி இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த அரிசி மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டு, அதற்கான முடிவுகளும் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரிசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.