தமிழக அரசியல் களம், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அப்படியே தலைக்கீழாக மாறியிருக்கிறது. தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்ததையடுத்து.. கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதை தீவிரமாக விசாரித்து முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. திமுக ஆட்சியில் நெடுஞ்சாலையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டிருந்தது. இது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.


இந்த சலசலப்புகள் மத்தியில், ரெய்டு நடந்த அதே நாளில் மின்சாரத்துறை சார்பில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியில் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதன் மூலம் ரூ.58000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மல் குமார் கூறியிருந்தார். .

இந்த சூழலில் தற்போது பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது புதிய சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


அமைச்சர் இது குறித்து கூறுகையில், "பத்திரப்பதிவு துறையில் தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க குழு அமைக்கப்படும். இந்த துறை வெளிப்படைத்தன்மையுடன் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார்.

பத்திர பதிவுத்துறையில் சந்தை மதிப்பு மற்றும் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு இதில் எது அதிகமோ அதை வைத்து தான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மதிப்பு குறைத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பல ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. நிலங்கள் மற்றும் கட்டிடங்களை பதிவு செய்ததில் குளறுபடிகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து விரைவில் பதிவுத்துறை சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது