மதுரை, ஜூலை 25-
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமாக அண்ணா பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி, கடந்த 2007-ம் ஆண்டு அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சிக்கு அரசு மருத்துவமனை ரூ.87 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இட நெருக்கடியை தடுக்க கடந்த 2007-ம் ஆண்டு மாநகராட்சி தனக்கு சொந்தமான இடத்தை தீவிர விபத்து சிகிச்சை பிரிவுக்காக வழங்கியது. அந்த இடத்தில் 5 தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டது. அதே போல, பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ள 1.60 ஏக்கர் நிலம் ஒருங்கிணைந்த மண்டல புற்றுநோய் மையத்திற்காக வழங்கப்பட்டது. 2007-ல் வழங்கப்பட்ட அண்ணா பேருந்து நிலைய இடத்திற்கு ரூ.68 கோடியும், பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக இடத்திற்கு ரூ. 19 கோடியும் சேர்த்து மாநகராட்சிக்கு ரூ.87 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தை அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி மூலம் சுகாதார துறைக்கு அறிவுறுத்தியது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்ட போது, பஸ் ஸ்டாண்ட் இருந்த இடம் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பணம் கட்ட வேண்டியதில்லை என்று கடிதம் மூலம் தெரிவித்து விட்டோம். புற்றுநோய் சிகிச்சை மையத்தை வருவாய்த்துறையினர் ஒப்படைத்து விட்டனர். இது போல, அரசுக்கு சொந்தமான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கலெக்டர் வீடு, போலீஸ் காவலர் குடியிருப்பு, போலீஸ் ஆணையாளர் அலுவலகம் இது போல அனைத்து அரசு அலுவலகங்களும் மதுரையில் ஏராளமாக உள்ளது. இவை அனைத்தும் மாநகராட்சிக்கு வரி செலுத்துவதில்லை. இதே போல, அரசியல்வாதிகள் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியையும் குறைக்க கூறுகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு ரூ. 87 கோடி வருவாய் இழப்பு என்று கூறுகின்றனர். ஆனால் வருவாய் இழப்பு பல கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் குடியிருப்பு வரி வசூல் செய்வதை மாநகராட்சி அதிகாரிகள் இதற்கென்று ஒரு குழு அமைத்து அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுக்கும் நினைவூட்டும் கடிதம் அனுப்பி மாநகராட்சிக்கு சேர வேண்டிய தொகையை வசூல் செய்ய வேண்டியது ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் (வருவாய்) ஆகியோருக்கு தான் உண்டு. இவர்கள் முயற்சித்தால், ஆணையாளரிடம் இந்த விபரங்களை தெரிவித்தால், ஆணையாளர் உடனடி நடவடிக்கைகள் எடுப்பார் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இதை விடுத்து மாநகராட்சிக்கு வரி பாக்கி என்று கூறுவது அர்த்தமற்ற செயலாகும் என அவர்கள் தெரிவித்தனர்.