ஹராரே: வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை எளிதாக வீழ்த்தியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. தொடர்ந்து 8வது முறையாக 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா 24, அறிமுகம் ஆனார். ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரான், நியூமன் நியாம்ஹுரி அறிமுகம் ஆகினர்.
ஜிம்பாப்வே அணிக்கு பென்னெட், பென் கர்ரான் ஜோடி துவக்கம் தந்தது. மறுபக்கம் இந்திய அணியின் இளம் 'வேகங்கள்' போட்டுத் தாக்கினர். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 125/7 ரன் மட்டும் எடுத்தது. மருமானி (27) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் மயங்க், பிரின்ஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணிக்கு அபிஷேக், 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் தந்தது. நிகரவா வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் 2 ரன் எடுத்த வைபவ், 18 பந்தில், சர்வதேச 'டி-20' அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். அடுத்த பந்தில் வைபவ் (50 ரன், 19 பந்து), பென் கர்ரானிடம் 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். இஷானுடன் ஜோடி சேர்ந்தார் ஷ்ரேயஸ் ஐயர். ஈவன்ஸ் பந்தில் இஷான் சிக்சர் அடிக்க, ஷ்ரேயஸ் தன் பங்கிற்கு பவுண்டரி விளாசினார். இந்திய அணியின் ஸ்கோர், 10.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது. 3 வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த நிலையில், இஷான் (35) முசரபானி பந்தில் வீழ்ந்தார். பின் வந்த திலக் வர்மா ஒரு பவுண்டரி அடிக்க, வெற்றி எளிதானது. இந்திய அணி 13.2 ஓவரில் 126/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் (28), திலக் வர்மா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.