சென்னை: தமிழகத்தில் வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் வெயில் பதிவு புதிய உச்சத்தை தொட்டபடியே உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள், பெரியோர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக குளுகுளு பிரதேசங்களுக்கு செல்லுதல், ஏ.சி. உள்ளிட்ட பொருட்களை வாங்குவது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஜூலை 24) முதல் ஜூலை 28ம் தேதி வரை ஆகிய 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போயுள்ளனர்.