சென்னை: சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண கோயம்பேட்டில் ரூ.103 கோடியில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அதிமுக அரசால் திறக்கப்பட்டது. கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பேருந்து நிலையப் பணிகளை தொடங்கி வைத்தேன்.
இந்நிலையில், திமுக அரசின் அலட்சியத்தால், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்பாரற்று சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போது கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சாலைகள் மோசமானதாகவும், உரிய மின் விளக்குகள் இல்லாமல் கோயம்பேடு பேருந்து வளாகத்தின் உட்புறம் காணப்படுகிறது. தற்போது புதிய அரசு அமைந்த பின்னரும், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து, ஜெயலலிதா ஆட்சியில் திட்டமிட்டதுபோல், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளையும், நகரப் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.