மதுரை மாவட்டம் பனையூர் கிராமத்தில் சிதிலமடைந்துள்ள பழமையான மணிகண்டேஸ்வரர் கோயிலைச் சீரமைக்க அனுமதி வழங்கக் கோரி, அக்கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்,.
மதுரை தெற்கு வட்டம், பனையூர் கிராமத்தில் (புல எண் 80/9) சுமார் 500 ஆண்டுகள் பழமையான மணிகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் தற்போது முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்தத் தொன்மையான சின்னம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இக்கோயிலைப் பாதுகாக்கும் நோக்கில், கிராமப் பொதுமக்களே ஒன்றிணைந்து தங்கள் சொந்த நிதியைக் கொண்டு சீரமைப்புப் பணிகளைச் செய்ய முன்வந்துள்ளனர். இருப்பினும், இந்தப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினால் கிராம மக்கள் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராஜ்குமார் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கோயிலைப் பராமரிக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது வருவாய்த் துறையினரே நேரடியாக இக்கோயிலைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.