மதுரை, செப்.6-
மதுரை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு 'தாய்' (டி.ஏ.இ.ஐ.,) இருவேறு வளாகங்களில் செயல்படுவதால் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். விபத்து, தீக்காயம், விஷமுறிவு, பக்கவாதம், மாரடைப்பு, குழந்தைகள் அவசர சிகிச்சை ஆகிய ஆறு பிரிவுகளை உள்ளடக்கியது 'தாய்' (டி.ஏ.இ.ஐ.,) எனப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு. 'கோல்டன் அவர்' எனப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே 'தாய்' பிரிவின் நோக்கம்.
தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவக்கல்லுாரி சார்ந்த அரசு மருத்துவமனைகளில் இந்த ஆறு பிரிவுகளும் ஒரே இடத்தில் ஒன்றாக செயல்படுகின்றன. இந்த எமர்ஜென்சி வார்டில் பேராசிரியர், இணைப்பேராசிரியர், உதவி பேராசிரியருடன் 11 எமர்ஜென்சி மெடிக்கல் அலுவலர்கள் (இ.எம்.ஓ.,) 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை (டி.சி.சி.,), பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகம் (எஸ்.எஸ்.பி.,) கட்டுவதற்கு முன் வரை ஒரே யூனிட்டாக பழைய வளாகத்தில் 'தாய்' பிரிவு செயல்பட்டது. 2007 ல் டி.சி.சி., வளாகம் கட்டப்பட்ட பின், விபத்தில் அடிபடும் நோயாளிகள் நேரடியாக அங்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
குழந்தைகள் நலப்பிரிவு வார்டில் நேரடியாக குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். தீக்காயம் பட்டவர்கள் பழைய மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கும் பக்கவாதம், மாரடைப்பு நோயாளிகள் அங்குள்ள ஜெய்க்கா கட்டட பிரிவிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
விஷமருந்தியோர் டாக்ஸிகாலஜி வார்டுக்கு மாற்றப்படுகின்றனர். அரசு மருத்துவமனை பழைய வளாகம், டி.சி.சி., வளாகம் என இருவேறு இடங்களில் 'தாய்' பிரிவு தனித்தனியாக பிரிந்து செயல்படுவதால் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
இங்கு 24 மணி நேரமும் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால் எமர்ஜென்சி பிரிவாக பார்க்கப்படுகிறது. இரு வளாகத்திற்கும் சேர்த்தே 2 பேராசிரியர்கள், ஒரு இணைப்பேராசிரியர், ஒரு உதவி பேராசிரியர், 14 இ.எம்.ஓ.,க்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடுகின்றனர். பேராசிரியர், இணைப்பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்றுப்பணிக்கு கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் டாக்டர்கள், நர்ஸ்கள் பணிச்சுமையால் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக டி.சி.சி., வளாகத்தில் விபத்தில் அடிபட்டவர்கள் சேர்க்கப்படும் போது அவர்களது உறவினர்கள் சிகிச்சையின் நிலை குறித்து டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே திறமையான நர்ஸ்களை 'ஷிப்ட்' முறையில் ஆற்றுப்படுத்துநராக (கவுன்சிலர்) நியமிக்க வேண்டும். இதன் மூலம் டாக்டர்கள் தொந்தரவின்றி சிகிச்சை அளிக்கமுடியும். உறவினர்களிடம் நோயாளியின் நிலையை விளக்கி பொறுமையாக கையாள முடியும்.
தென்மாவட்டங்களில் விபத்தில் அடிபடுபவர்கள், விஷமருந்துபவர்கள், தீக்காயம் பட்டவர்கள் இங்கு தான் அதிகமாக அனுமதிக்கப்படுகின்றனர் என்பதால் கூடுதல் டாக்டர்கள், நர்ஸ்கள், ஆற்றுப்படுத்துநர்களை அரசு நியமிக்க வேண்டும்.