மதுரை, ஜூலை 17-

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) இளம் தொழில்முனைவோர் பிரிவான யங் இந்தியன்ஸ் (Young Indians) சார்பில் நடத்தப்படும் தென் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்முனைவோர் உச்சிமாநாடான 'YiFi 2026' மதுரையில் (ஜூலை 17) தொடங்கி, 18-ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

"எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள 71 யங் இந்தியன்ஸ் கிளைகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்டார்ட்அப் வளர்ச்சி, உலகளாவிய சந்தை வாய்ப்புகள், முதலீட்டு உத்திகள், தொழில்நுட்ப புதுமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முன்னணி தொழில் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். மேலும், புதிய வணிக கூட்டாண்மைகளை உருவாக்கும் வகையில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த மாநாடு தமிழகத்தில் தொழில்முனைவு சூழலை மேலும் வலுப்படுத்துவதுடன், இளம் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.