கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் 40 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு அந்த சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கோவையில் செம்மொழி பூங்கா கட்ட ரூ.45 கோடிக்கு மட்டுமே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதன் பின்னர், கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில், சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சி நிதியில் கூடுதல் எஸ்டிமேட் என்ற பெயரில் கூடுதல் கொள்ளை நடந்துள்ளது. திட்டப்பட்டியலில் இல்லாத பல பொருட்களை பயன்படுத்தி 45 கோடி ரூபாய்க்கு பதில் 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மாநகராட்சி பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி, தனியார் வல்லுநர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தால் போலி பில் போட்டு ரூ.40 கோடிக்கு மேல் கொள்ளை அடித்தது வெளிச்சத்திற்கு வரும். தேர்தல் செலவிற்கு பணம் தேவை என்பதால் 5 ஆண்டுக்குள் போட்ட ரோடுகளையே பெரும்பாலும் தேர்வு செய்து அதனை திரும்ப போடுவது போல் நடித்து 50 சதவீதம் பணி செய்து 100 சதவீதத்திற்கு மேல் பில் போட்டு உள்ளனர். கடந்த 6 மாதத்தில் நடந்த பணிகளை மறு ஆய்வு செய்து அதன் தரம் மற்றும் அளவை சரிபார்ப்பதுடன் தவறு இருக்கும் பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.