கடலாடி:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களம் கிராமத்தில் அமைந்துள்ள முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் உருவச் சிலை வளாகத்தில் அடிப்படை வசதிகள் கோரிய மனுவிற்கு, கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன் அளித்த பதிலில் ஏற்பட்ட சர்ச்சை தற்போது அதிகாரப்பூர்வ புதிய தெளிவுரை மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

கோரிக்கை மனுவின் விவரம்:

இளஞ்செம்பூர், மக்கள் சேவை இளைஞர் இயக்கத்தின் தலைவர் . கோ. உமையலிங்கம் என்பவர் அரசு இணையதள போர்ட்டல் (மனு எண்: TN/RDPR/RMD/P/PORTAL/04SEP26/18990404) வாயிலாகக் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில், மங்களம் கிராமத்தில் அமைந்துள்ள மாவீரர் பூலித்தேவர் உருவச் சிலை இருக்கும் இடத்தில் பேவர் பிளாக் (Paver Block) கற்கள் பதித்தல், தகரச் சீட் அமைத்தல், இடத்தை அளந்து பென்சிங் (Fencing) வலை அமைத்தல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கிளம்பிய சர்ச்சை (16.09.2026 நாளிட்ட கடிதம்):

இம்மனுவிற்கு கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன் (கிராம ஊராட்சி) சார்பில் கடந்த 16.09.2026 அன்று அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் (ந.க.பி4/1253/2026), "இதுபோன்று சமுதாயத் தலைவர்கள் உருவச் சிலை இருக்கும் இடத்தில் பேவர் பிளாக் மற்றும் தகரச் சீட்டு அமைக்க வழிவகை இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய விடுதலைப் போராட்ட மாவீரரான பூலித்தேவரை 'சமுதாயத் தலைவர்' எனக் குறிப்பிட்டதும், சிலை வளாகத்தில் வசதிகள் செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவித்ததும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

புதிய விளக்கமும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியும் (18.09.2026 நாளிட்ட கடிதம்):

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சார்பில் 18.09.2026 நாளிட்டு திருத்தப்பட்ட புதிய கடிதம் (ந.க.பி4/1253/2026) வெளியிடப்பட்டது. அதில், பூலித்தேவரை "முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர்" என முறைப்படி குறிப்பிட்டுப் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மேற்கண்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பேவர் பிளாக் மற்றும் தகர சீட் அமைப்பு ஏற்படுத்த மங்களம் கிராம ஊராட்சியில் போதிய நிதி இருப்பு இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்".

முந்தைய கடிதத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மாற்றப்பட்டு, தற்போது ஊராட்சியில் நிதி இருப்பு இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் செய்யப்படும் எனத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.