பீகார் சட்டப்பேரவை கூட்டத்துக்கு சக்கர நாற்காலியில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்தார்.

பீகார் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில கவர்னர் உரையாற்றினார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் அளித்த வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, பாட்னா மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவியின் மர்ம மரணம் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று காலை சக்கர நாற்காலியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி, காலில் சிறிய காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.