பாட்னா: பீஹாரின் பாங்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜ தலைவர் நிதின் நபீன் ராஜ்யசபா எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொகுதிக்குட்பட்ட பாங்கிபூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 30ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜ சார்பில் நீரஜ் குமார் சின்ஹாவும், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக ரேகா குப்தாவும், ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில், பாஜ, ஆர்ஜேடி வேட்பாளர்களை விட, ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுள்ளார். 12 சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பாஜ வேட்பாளரை காட்டிலும் 6674 ஓட்டுகள் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.

பாஜவின் கோட்டையாக இருக்கும் பாங்கிபூர் தொகுதியில் 2010ம் ஆண்டு முதல் நிதின் நபீனும், அதற்கு முன்பாக அவரது தந்தை நபீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவும் இத்தொகுதியைத் தக்கவைத்து வந்திருந்தனர். இந்த சூழலில், இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.