டில்லியில் செப்டம்பர் 12,13ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். அந்த வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 12ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வருகிறார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மேம்படுவதற்கான வாய்ப்பாக இது அமையும். 2019ம் ஆண்டில் 200க்கும் குறைவான அதிகாரிகளுடன் வந்திருந்த நிலையில், இந்த முறை ஜி ஜின்பிங்குடன் 400 அதிகாரிகள் கொண்ட குழு வர இருக்கிறது.

சீன அதிகாரிகள் தங்கும் விடுதிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்வதில் இந்திய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர். ஏற்கனவே, '' பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பங்கேற்கிறாம்; இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியாவை ஆதரிக்கிறோம்' என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லைப் பிரச்னை குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்று இருக்கிறார். எல்லையில் அமைதி நிலவுவது உறவுகளுக்கு மிகவும் அவசியம் என்று இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.