கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி டாட் கிரீன்பர்க், இந்தியாவில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை நடத்தும் முயற்சியை முன்மொழிந்துள்ளார்.
இதுகுறித்து கிரீன்பர்க் கூறும்போது, “அனைத்து வாய்ப்புகளையும் நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ-யுடனான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உறவு வலுவாக உள்ளது. ஆகவே இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பையும் நாம் பரிசீலிக்கலாம். இப்போதைக்கு நாங்கள் அப்படி ஒன்றைத் திட்டமிடவில்லை, ஆனால் வாய்ப்புகளை நாம் திறந்து வைத்திருப்பதில் தவறில்லை, பரிசீலனையில் வைத்திருக்கலாம்.
எங்கள் அணி, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் மிகவும் வலுவாகவே இருப்பதாக நான் கருதுகிறேன்; உலகின் பிற பகுதிகளில் நிலவும் போக்குக்கு இது ஒரு விதிவிலக்காகவே உள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து வளர்த்து வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். உலகளாவிய கிரிக்கெட்டில் நம் அனைவருக்கும் உள்ள சவால் என்னவென்றால், ஒரு கால அட்டவணையில் 365 நாட்கள் மட்டுமே உள்ளன; ஆனால், நாங்கள் விரும்பும் போட்டிகளை நடத்த வேண்டுமானால், கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தேவைப்படலாம்." என்றார்.