காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூரு பயணம் மேற்கொள்வதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது. அத்துடன் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக முதல்வர் விஜய் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். இதனை ஏற்று ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தருமாறு முதல்வர் விஜய்க்கு கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று (ஜூலை 24-ந் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், ஆகஸ்ட் 3-ந் தேதி தமிழக ”மக்களின் நலனுக்காக முதல்வர் விஜய் பெங்களூர் செல்கிறார். மேகதாது அணை குறித்து பேசுவாரா இல்லையா? என்பது பின்னர்தான் தெரியும். மேகதாது அணையை கட்ட அனுமதிப்பது இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்றார்.
கடந்த 1997-ம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர், சென்னையில் கர்நாடகா முதல்வர் ஜே.எச். பட்டீலுடன் காவிரி நதிநீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் 2012-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சென்று கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து காவிரி நீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக தீர்வு காணப்படவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக- கர்நாடகா முதல்வர்கள் இடையே மீண்டும் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.