புதுடெல்லி: பல மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்​கு, பாஸ்போர்ட்டை குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்​டது.


இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வகுக்கப்பட்ட நடைமுறைகளின்​படி, முறையான சரி​பார்ப்புகளுக்குப் பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ பாஸ்போர்ட் வழங்குவது என்பது, பாஸ்போர்ட் சட்டம் 1967 மற்றும் பாஸ்போர்ட் விதி​கள் 1980 ஆகிய​வற்​றின் படியே கட்டுப்படுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் சட்​டம் 1967-ன் படி, இந்தியக் குடிமக்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதை முறைப்படுத்துவதற்காக, இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு முக்கிய ஆவணமாகவே இந்திய பாஸ்போர்ட் விளங்குகிறது. மேலும், தற்போது இந்தியர்களில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பாஸ்போர்ட் வைத்​துள்​ளனர்" என்​றார். முன்ன​தாக, கடந்த மாதம் ஜூன் 24 அன்று நடை​பெற்ற ‘பாஸ்போர்ட் சேவா திவஸ்’ செய்​தி​யாளர் சந்​திப்​பின் போதும், இந்திய பாஸ்போர்ட் என்​பது முழுக்க முழுக்க ஒரு பயண ஆவணம் மட்​டுமே என்​றும், அதனை குடி​யுரிமைக்​கான சான்​றாகக் கருதக் கூடாது என்​றும் வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​திருந்​தது. பாஸ்​போர்ட் என்​பது இந்​தி​யக் குடிமக்​களுக்கே வழங்​கப்​படு​கிறது என்​றாலும், அதன் முதன்மை நோக்​கம் சர்​வ​தேசப் பயணங்​களை மேற்​கொள்​வதும், வெளி​நாடு​களில் ஒரு​வரின் அடை​யாளத்தை உறு​திப்​படுத்​து​வதுமே ஆகும் என்று அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர். பாஸ்​போர்ட் சட்​டம் 1967-ன் கீழ் இந்​திய குடிமகன் அல்​லாதவர்​களுக்​கும் பாஸ்​போர்ட் வழங்​கப்பட வாய்ப்​பு​கள் உள்​ளன. இதனால்தான் ஒரு​வரிடம் பாஸ்​போர்ட் இருப்​பது மட்​டுமே அவர் இந்​நாட்​டின் குடிமகன் என்​ப​தற்​கான ‘முடி​வான’ அல்​லது‘ முழுமையான’ ஆதா​ரம் ஆகி​வி​டாது என்று கடந்த 2013-ம் ஆண்டு வழங்​கிய தீர்ப்பு ஒன்​றில் மும்பை உயர் நீதி​மன்​றம் சுட்டிக்காட்டியிருந்​தது.