டெல்லி, செப். 19-

2029 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் இல்லாமல் தேசிய அளவில் 3வது அணியை உருவாக்குவது குறித்த பேச்சுகள் மீண்டும் பரபரப்பாகியுள்ளன.

திமுக எம்பி கனிமொழி அடுத்தடுத்து முக்கியமான பிராந்திய கட்சி தலைவர்களை சந்தித்து வருவது, திமுக தேசிய அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. ஆனால், இப்போதே 3வது அணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. பாஜகவுக்கு எதிராக இருக்கும்.. அதேநேரம் காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க விரும்பாத பிராந்திய கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு

சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் சந்தித்த கனிமொழி, இப்போது டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (SP) தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். அடுத்ததாக கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடக்கிறது

தமிழ்நாடு அரசியல் சூழலில் காங்கிரஸ் - திமுக இடையேயான உறவில் ஏற்பட்ட மாற்றமே தற்போதைய நகர்வுகளுக்கு பின்னணியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் அரசியலில் காங்கிரஸ், விஜய்யின் தவெகவுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதன் தாக்கம் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டது. திமுக எம்பிக்கள் காங்கிரஸ் எம்பிக்களுடன் இணைந்து அமர்வதை மாற்றி, தனி இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுகவுக்கு தனி இருக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், ஜூன் மாதம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை. இதனால் திமுகவும் காங்கிரஸும் தேசிய அளவில் இணைந்து செயல்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து பேசப்பட்டதாக சிவசேனா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற கவலைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி கூட்டணியில் பிராந்திய கட்சிகள் வகிக்கக்கூடிய பங்கு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து சந்திப்பு

இதையடுத்து டெல்லியில் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோரை கனிமொழி சந்தித்துள்ளார். மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் என்சிபி இடையே மோதல் வெடித்துள்ளதாகச் சமீப காலமாக தகவல் பரவி வந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. அடுத்ததாக மம்தா பானர்ஜியை கனிமொழி சந்திக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது காங்கிரஸுடன் சமீபத்தில் கருத்து வேறுபாடுகளை கொண்ட அனைத்து பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த தொடர் சந்திப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த சந்திப்புகள் நடந்ததாலேயே காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை மட்டும் இணைத்து தேசிய அளவில் தனி அணியை உருவாக்கப்படும் என சொல்லிவிட முடியாது. 2013ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி இதேபோன்ற ஒரு மூன்றாம் அணி யோசனையை முன்வைத்தார். 2018ஆம் ஆண்டு அப்போதைய தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவும் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இதுபோன்ற முயற்சியை முன்னெடுத்தார்.

கெஜ்ரிவால்

அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் முதல்வர்களை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க முயன்றார். இருப்பினும், எந்தவொரு முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் திமுகவின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பதை நாம் காத்திருந்தே பார்க்க வேண்டும்!